×

புதுவை கவர்னர் கிரண்பேடி ஆவேசம் ராஜ் நிவாசில் 5 ஆளுநர்களா? யாரும் இங்கே நிரந்தரமில்லை

புதுச்சேரி:  ராஜ் நிவாசில் 5 ஆளுநர்கள் உள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு, நாளை நடப்பது யாருக்கும்  தெரியாது. யாரும் இங்கே நிரந்தரமல்ல என புதுவை கவர்னர் கிரண்பேடி பதிலடி கொடுத்துள்ளார். புதுச்சேரி  கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது நிர்வாக ரீதியாக சில குறைபாடுகள்  இருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். அப்போது, முதல்வர் நாராயணசாமி ராஜ் நிவாசில் 5  கவர்னர்கள் பணியாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு கிரண்பேடி கூறியதாவது: கவர்னர் மாளிகையில் நான் மட்டும் இல்லை, என்னுடன் சேர்ந்து அதிகாரிகளும் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் பணிபுரிகின்றனர். அடித்தட்டில்  வாழ்கின்ற மக்களின் முன்னேற்றத்துக்காக, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளைக்கூட தியாகம்  செய்கிறார்கள். நாங்கள் அனைவரும்  புதுச்சேரிக்கு பயனுள்ள வகையில்தான் செயல்பட்டு வருகிறோம்.  குறிப்பாக நீர்நிலைகளை பாதுகாத்ததன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் 4 மீட்டரில் இருந்து  10 மீட்டராக அதிகரித்திருக்கிறது. வெள்ளத்தடுப்பு திட்டம், தூய்மையான புதுச்சேரி என எங்களின் பணி நீண்டு  கொண்டே இருக்கிறது.

இங்கே  யாரும் நிரந்தரம் இல்லை, மனித வாழ்க்கையே அப்படித்தான். யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. நாளை என்ன நடக்கிறது என்பது யாருக்கும்  தெரியாது. நான்  ராஜ் நிவாசில் மட்டும் அமர்ந்திருக்க வேண்டுமா? அப்படியானால் எதற்காக  என்னிடம் நியமனம், இடமாற்றம், மக்கள் நல திட்ட கோப்புகளை அனுப்ப வேண்டும்?  புதுச்சேரியின் நிர்வாகியாக நான் செயல்படுகிறேன். இதுவரை 212 வாரங்களை  நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். எங்களின் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார். கிரண்பேடியே திரும்பிப்போ என டெல்லியில் அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதே  என்ற கேள்விக்கு கவர்னர்  கருத்து கூற மறுத்து விட்டார். அனைவரும் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு  திரும்பி வர தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : governors ,Raj Niwas Nobody , governor, kiran bedi, narayanasamy,
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...